Sunday, September 2, 2012

அஸ்ஸாமில் கலவரம்-பிரச்னை திசை திருப்பப்பட்டது! - பேரா ஜவாஹிருல்லாஹ்:


அஸ்ஸாமில் போடோ இன மக்கள் மற்றும் சிறுபான்மையோருக்கு இடையே நடந்த மோதலில் எழுபதுக்கும் மேற்பட்டவர்கள் கொல்லப்பட்டார்கள். அந்தக் கோர சம்பவங்களைத் தொடர்ந்து நாட்டின் பல பகுதிகளிலிருந்தும் ஆயிரக்கணக்கில் வட கிழக்கு பகுதி மக்கள் உயிருக்கு பயந்து தங்கள் மாநிலங்களுக்குத் திரும்பினார்கள். இந்த நிகழ்வுகளை தங்கள் நோக்கில் அணுகி இங்கே கருத்து சொல்பவர்கள் மனிதநேய மக்கள் கட்சியின் சட்டமன்ற குழு தலைவரான பேராசிரியர் ஜவாஹிருல்லாஹ் மற்றும் இந்து மக்கள் கட்சியின் தலைவர் அர்ஜுன் சம்பத்.


ஒற்றுமைக்கு உலை வைக்கும் வோட்டு வங்கி அரசியல்! - அர்ஜுன் சம்பத்:

சமய நல்லிணக்கத்துக்கு மிகச் சிறந்த எடுத்துக்காட்டாய் விளங்கிய பூமிதான் வங்காளம். மகான்கள், மேதைகள் வாழ்ந்த பூமி. பிரிட்டிஷ் அரசின் பிரித்தாளும் சூழ்ச்சி காரணமாக வங்கம், கிழக்கு மேற்கு என்று பிரிந்தது. இதை எதிர்த்து இந்து, முஸ்லிம் என்று இரு சமய மக்களும் போராடினர். ஜாலியன் வாலாபாக்கில் மக்கள் வங்கப் பிரிவினைக்கு எதிர்ப்பு தெரிவிக்கவே கூடினார்கள். அங்குள்ள முஸ்லிம் மக்கள் ஒளரங்கசீப் காலத்தில் மதம் மாறியவர்கள். வங்க மொழி பேசுபவர்கள். வங்கக் கலாசாரம் தொன்மையுடையது. புரட்சிக்காரர்களின் தாயகம் வங்கம். ஆனால் பிரிட்டிஷ்காரர்களின் சூழ்ச்சி காரணமாக, சுதந்திரத்துக்கு பின்னர் கிழக்கு வங்கம், கிழக்குப் பாகிஸ்தானாக உருவானது. “சுதந்திரத்துக்குப் பிறகு நீங்கள் இந்தியாவுடன் இருந்தால், சிறுபான்மையினராக உங்களை நசுக்கி விடுவார்கள். என்று வெறியூட்டியே கிழக்குப் பாகிஸ்தான் என்று பிரித்தெடுத்துக் கொண்டு போனார்கள். ஆனால் விசித்திரம் என்னவென்றால் சுதந்திரத்துக்குப் பிறகும் பாகிஸ்தான் ஆட்சியாளர்களால் புறக்கணிக்கப்பட்ட, கொடுமைப்படுத்தப்பட்ட கிழக்குப் பாகிஸ்தான் முஸ்லிம்கள் முஜிபுர் ரஷ்மான் தலைமையில் தனிநாடு போராட்டம் நடத்த, இந்திராகாந்தி உதவ, பங்களாதேஷ் உருவானது. இந்த வரலாற்றை எதற்குச் செல்கிறேன் என்றால், 1971ல் வங்காள தேசம் உருவாவதற்கு முன்பும் அதையொட்டியும் கிட்டத்தட்ட ஒன்றரைகோடி வங்காள முஸ்லிம்கள் அஸ்ஸாமுக்கும், கிழக்கு மேற்கு வங்கத்துக்கும் அகதிகளாய் வந்து சேர்த்தார்கள்.

இந்த அகதிகள்தான் பின்னர் பங்களாதேஷ் தனி நாடான பிறகு திரும்பிப் போகாமல் இந்தியப் பகுதிகளில் - குறிப்பாக அஸ்ஸாமில் தங்கிவிட்டார்கள். அவர்களை திருப்பியனுப்ப இந்திராகாந்தி எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. பின்னர் ரேஷன் கார்டு, வாக்காளர் அடையாள அட்டை என்று வாங்கிக் கொண்டு இந்திய மக்கள் தொகையோடு அவர்களும் கரைந்து போனார்கள். இவர்கள் அனைவரும் சட்ட விரோதமாக குடியேறிய ஊடுருவல்காரர்கள்தான். உள்ளூர் மக்களின் - குறிப்பாக போடோ பழங்குடி மக்களின் வாழ்வாதாரத்தை பாதிக்கும் வகையில் அகதிகளின் குடியேற்றம் இபுருந்ததால், இரு பிரிவனருக்கும் பகை வளர்ந்தது. இந்த வங்க தேச முஸ்லிம் அகதிகள், அஸ்ஸாமில் கால் ஊன்றுவதற்கு முழுக்க உதவியவர்கள் ஏற்கெனவே அங்கு பல காலம் முன்பு குடியேறிய வங்க முஸ்லிம்கள்தான். எனவே அகதிகள் என்று பிரித்துப் பார்க்காமல் ஒட்டுமொத்த முஸ்லிம் சமய மக்களுக்கும் போடோ மக்களுக்கும் இடையே மோதல் வெடித்தது. 1983ல் நெய்டா என்ற இடத்தில் தொடங்கிய மோதல் இன்று வரை நீடிக்கிறது.

வங்க தேசத்திலிருந்து அகதிகளாக வந்தவர்களுடன் சேர்த்து, சிறுபான்மை சமூகம் இன்று அஸ்ஸாமின் 27 மாவட்டங்களுள் பதினொன்றில் மெஜாரிட்டியாக இருக்கிறது. அரசியல் தலைமையைத் தீர்மானிக்கும் சக்தி இவர்களுக்கு இருப்பதால், காங்கிரஸ் கட்சி இவர்களை தாஜா செய்து வோட்டு வாங்கி அரசியல் நடத்திக் கொண்டிருக்கிறது. பா.ஜ.க. அரசு, பிரச்னையின் தீவிரத்தை உணர்ந்தாலும் அதன் ஆட்சிக் காலத்தில் அகதிகளைக் கண்டெடுத்துத் திருப்பி அனுப்பும் பணியை மேற்கொள்ளவில்லை. போடோ டெரிடோரியல் கவுன்ஸில் என்று அமைந்தாலும் அதனால் போடோ மக்களுக்குப் பெரிய பயன் ஏதுமில்லை. பல்லாண்டு கால தொடர் பகையுடன் படித்த வேலையில்லாத போடோ இளைஞர்கள் எண்ணிக்கையும் அதிகமாகிவிட்டதால் அவ்வப்போது மோதல்கள் வெடிக்கின்றன. கிறித்துவ மெஷனரிகள் போடோ மக்களைத் தூண்டி விடுகின்றன என்ற தகவலும் உண்டு. அதில் ஒன்றுதான் சமீபத்தில் 77 பேர் இறந்த மோதல். இதில் யாரும் எதிர்பாராத திருப்பம், நாட்டின் மற்ற பகுதிகளில் இருந்த வடக்கிழக்குப் பகுதி மக்கள் தாக்குதல் பயம் காரணமாக ஊர் திரும்பியதுதான். பாகிஸ்தானிய வலைத்தளங்கள் செய்த சதி காரணமாக வடகிழக்கு மக்கள் அச்சுறுத்தலுக்குத் தள்ளப்பட்டார்கள் என்றாலும் இந்தியாவில் குறிப்பாக கோவை, மும்பையில், சதிக்குத் துணை போனவர்கள் இருக்கிறார்கள். அஸ்ஸாம் மோதலுக்குப் பிறகு, அதைக் கண்டித்து சிறுபான்மையோர் மும்பையில் நடத்திய ஊர்வலத்துக்குப் பிறகாவது உளவுத்துறை விழிப்புணர்வுடன் இருந்திருக்க வேண்டும்.

அஸ்ஸாமில் இனியும் மோதல்கள் தொடருவதை நிறுத்த வேண்டுமென்றால் மத்திய, மாநில காங்கிரஸ் அரசுகள் சிறுபான்மை மக்களை வோட்டுக்காக தாஜா செய்வதை நிறுத்த வேண்டும். எல்லா பிரிவினருக்கும் சம உரிமை, சலுகைகள் வழங்கப்பட வேண்டும். எல்லைகள் பலப்படுத்தப்பட்டு, ஊடுருவல் நிறுத்தப்பட வேண்டும். ஐ.நா. உதவியுடன் அஸ்ஸாமில் ஊடுருவல்காரர்கள் கண்டறியப்பட்டு அவர்களை வங்காள தேசத்துக்குத் திருப்பி அனுப்ப வேண்டும். இந்திய ஒற்றுமையைச் சீர்குலைக்க சர்வதோ தீவிரவாத சக்திகள் முயல்கின்றன. அவர்களுக்கு வங்கதேச முஸ்லிம்கள் தோள் கொடுப்பது கடந்த காலங்களில் நிரூபிக்கப்பட்டிருக்கிறது. எனவே வோட்டு வங்கி அரசியலை உதறியெறிந்துவிட்டு உண்மையான அக்கறையுடன் பிரச்னையைத் தீர்க்கும் பொறுப்பு மத்திய அரசுக்கு இருக்கிறது. மெத்தனமோ, தாமதமோ மிக மோசமான விளைவுகளை உருவாக்கும்.

பிரச்னை திசை திருப்பப்பட்டது! - பேராசிரியர் ஜவாஹிருல்லாஹ்:

நேரடியாகப் பிரச்னைக்குள் வருகிறேன். அஸ்ஸாமில் உள்ள வங்காள முஸ்லிம்கள் அனைவரும் ஊடுருவல்காரர்களோ, சட்டவிரோதமாக குடியேறியவர்களோ அல்ல. அவர்கள் 100, 150 ஆண்டுகளுக்கு முன்னரே அங்கு சென்று குடியேறியவர்கள். அதற்கென்று ஊடுருவல் இல்லை என்று சொல்ல மாட்டேன். ஆனால் ஒன்றரைகோடி பேர் சட்ட விரோதமாக ஊடுருவி குடியேறியிருக்கிறார்கள் என்பது சங்பரிவாரின் மிகைப்படுத்தப்பட்ட குற்றச்சாட்டு. அவர்கள் அப்படிச் சொல்வது எல்லையைப் பாதுகாக்கும் நமது ராணுவத்தைக் களங்கப்படுத்துவது ஆகும். 1971ம் ஆண்டு வங்க தேசம் உருவாவதற்கு முன்பு ஆயிரக்கணக்கில் அகதிகள் இந்தியாவுக்குள் வந்தார்கள் என்பதும் இந்திரா காந்தி மனிதாபிமானத்தோடு அவர்களை அனுமதித்து மறுவாழ்வுக்கு உதவினார் என்பதும் வரலாற்று உண்மை. ஆனால் வழக்கம் போல பா.ஜ.க. கட்டுக்கதைகளை அவிழ்த்து விட்டு மக்களைக் குழப்புகிறது.

அஸ்ஸாமில் கலவரம் முக்கியமாக நடந்த கொக்ரஜார் மாவட்டத்தையும் உள்ளடக்கி வாஜ்பாய் காலத்தில் போடோ ரெரிடோரியல் கவுன்ஸில் அமைக்கப்பட்டது. ஆனால் 29 சதமே உள்ள போடோ பழங்குடியினர் பெரும்பான்மையாக இடம் பெறும் வகையில் அந்த கவுன்ஸில் அமைக்கப்பட்டிருக்கிறது. இதன் விளைவாக 71 சதம் உள்ள போடோ அல்லாத மற்றவர்கள், அதிகாரம் பெற்ற போடோக்களால் தாக்கப்படுகின்றனர். இந்த 71 சதவிகிதத்தினருள் முஸ்லிம்கள் 30 சதவிகிதத்தினர்தான்! ஆனால் போடோக்கள் தாக்குவது முஸ்லிம்களைத்தான்! இவர்கள் தனி நாடு கேட்டுப் போராடியபோது பயன்படுத்திய ஆயுதங்கள், கவுன்ஸில் அமைக்கப்பட்டு அரசியல் தீர்வு கண்டபோது பறிக்கப்படவில்லை. எனவே போடோக்கள் கையில் நவீன ஆயுதங்கள் சகஜமாக நடமாடுகின்றன. போடோ அல்லாத மற்றவர்களின் உயிரைப் பறித்து கலவரத்தை உருவாக்குவது அவர்களுக்குச் சுலபமாக இருக்கிறது. தருண் கோகோய் தலைமையிலான மாநில காங்கிரஸ் அரசு ஒரு கையாலாகாத அரசாக இருக்கிறது. மத்திய அரசும் அரசியலுக்காக சிறுபான்மையினரான முஸ்லிம்களை தாஜா செய்யும் போக்கை காங்கிரஸ் கடைபிடிக்கிறது என்று குற்றம் சாட்டும் தார்மிக உரிமை சங்பரிவாருக்கு இல்லை. காரணம் அப்படி ஒரு குற்றச்சாட்டைத் திரும்பத் திரும்பச் சொல்லி, பெரும்பான்மையோரை செறுப்புறச் செய்து, அவர்கள் வோட்டுக்களைப் பறிக்கும் வோட்டு வங்கி அரசியலைத்தான் பா.ஜ.க. கடைப்பிடிக்கிறது!

அஸ்ஸாம் கலவரத்தைக் கண்டித்து மும்பையில் நடந்த கண்டன ஊர்வலத்தில் போலீஸ் சுட்டு இருவர் இறந்து போனார்கள். விஷமிகள் ஊடுருவியதால் அந்த ஊர்வலம் வன்முறைக் களமாகியது. அதற்குப் பிறகு தான் நாட்டின் பல பகுதிகளிலிருந்து வடகிழக்குப் பகுதி மக்கள் தங்கள் மாநிலங்களுக்குத் திரும்பிச் சென்றார்கள். இட்டுக் கட்டப்பட்ட படங்களை வலைத் தளங்களில் வெளியிட்டு இஸ்லாமியர்களை பாகிஸ்தான் தூண்டிவிட்டதால்தான் தொடர் விளைவாக வடகிழக்கு மாநிலத்தவர், உயிருக்குப் பயந்து திரும்பிச் செல்லும் நிலை ஏற்பட்டதாக அரசு சொல்கிறது. இப்போது என்ன நடந்திருக்கிறது என்றால் அஸ்ஸாமிலும், மியான்மாரிலும் நடந்த முஸ்லிம் கோரப்படுகொலைகள் பின்னுக்கு மறைக்கப்பட்டு, பிரச்னை திசை திரும்பிவிட்டது! இது அரசாங்கமே செய்த சதியாகக் கூட இருக்கலாமோ என்ற சந்தேகமும் எழுகிறது. யாரேனும் சிறுபான்மை சமூகத்தைச் சேர்ந்தவர் இதுபோன்ற சதிச் செயலில் ஈடுபட்டிருந்தால் அது தேசத் துரோகம்தான்.

“வதந்தி பரப்பும் அவதூறு செய்திகளை பரப்புவோர் இறந்த சகோதரனின் மாமிசத்தைத் தின்பதற்குச் சமமாவாரகள்’ என்று நபி பெருமானார் சொல்லியிருக்கிறார். இன்று மூன்றரை லட்சம் முஸ்லிம்கள் அகதிகள் முகாமில் இருக்கிறார்கள். நீண்ட கால நோக்கில் பார்க்கும் போது போடோ அல்லாத மற்ற சமூகத்தினருக்கு டெரிடோரியல் கவுன்ஸிலில் அதிகார பகிர்வு வழங்கப்பட வேண்டும். போடோக்கள் கையில் உள்ள ஆயுதங்களைப் பறிமுதல் செய்ய வேண்டும். ஒட்டுமொத்த மக்களை கருத்தில் கொண்டு வளர்ச்சித் திட்டங்கள் தீட்டப்பட வேண்டும்.

- ப்ரியன் (கல்கி: 2/9/2012)

No comments:

Post a Comment