Wednesday, July 17, 2013

தமிழக கைதிகளை இந்தியாவுக்கு மாற்றுவதில் தாமதம் ஏன்?

தமிழக கைதிகளை இந்தியாவுக்கு மாற்றுவதில் தாமதம் ஏன்?

கடைசியாக பிரசுரிக்கப்பட்டது: 17 ஜூலை, 2013 - 09:27 ஜிஎம்டி
எம்.எச். ஜவாஹிருல்லா
எம்.எச். ஜவாஹிருல்லா
இலங்கைச் சிறையில் உள்ள தமிழக கைதிகள் 11 பேரையும் இந்தியா அழைத்துவருவதற்கான நடவடிக்கைகளை விரைவு படுத்துமாறு மனித நேய மக்கள் கட்சி தமிழக அரசிடம் கோரிக்கை விடுத்துள்ளது.
தமிழக அரசின் உள்துறை அலுவலகத்தில் இந்தக் கைதிகளின் கோப்புகள் தேங்கிக் கிடப்பதாலேயே தாமதமேற்பட்டுள்ளதாகவும் அக்கட்சியின் தலைவரும் சட்டமன்ற உறுப்பினருமான எம். எச். ஜவாஹிருல்லா சுட்டிக்காட்டியுள்ளார்.


இந்தியாவிற்கும் இலங்கைக்கும் இடையே 2010 ம் ஆண்டில் கைச்சாத்தான ஒப்பந்தப்படி, இந்தியாவில் தண்டனை பெற்று சிறைகளில் உள்ள இலங்கையைச் சேர்ந்த கைதிகள் இலங்கைக்கு அனுப்பப்பட வேண்டும். அங்கு அவர்கள் எஞ்சிய தண்டனைக் காலத்தைக் கழிப்பார்கள்.
அதேபோல் இலங்கைச் சிறைகளில் உள்ள தண்டனைப் பெற்ற இந்திய கைதிகள் இந்தியாவிற்கு அனுப்பப்பட்டு, எஞ்சிய தண்டனை காலத்தை இந்தியச் சிறைகளில் கழிக்கவேண்டும்.
அந்த உடன்பாட்டின் அடிப்படையில் கடந்த மார்ச் மாதம், இலங்கைச் சிறையில் இருந்த 20 இந்தியக் கைதிகள் இந்தியாவிற்கு அனுப்பபட்டனர். இவர்களைத் தவிர இன்னும் 11 தமிழக கைதிகள் இன்னும் இலங்கையில் உள்ள வெலிக்கடைச் சிறையில் உள்ளனர்.
இலங்கையில் உள்ள இந்தியத் தூதரகம் கைதிகளை அடையாளம் கண்டு அவர்களை இந்தியா அனுப்புவதற்கான பயண ஏற்பாடுகளைச் செய்வது உள்ளிட்ட நடைமுறைகளை நிறைவுச் செய்துவிட்டது.
ஆனால் தமிழக அரசின் உள்துறையில் இவர்கள் தொடர்பான கோப்புகள் கடந்த 3 மாதங்களாக நிலுவையில் உள்ளதால் இந்த 11 தமிழக கைதிகளும் நாட்டிற்கு திரும்ப வர இயலாத நிலை ஏற்பட்டுள்ளது.
எனவே தமிழக அரசு இந்த 11 தமிழர்களும் நாட்டிற்கு திரும்ப உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என மனிதநேய மக்கள் கட்சியின் சட்டமன்ற உறுப்பினர் ஜவாஹிருல்லா கேட்டுக்கொண்டிருக்கிறார்.
இந்த கைதிகளில் அதிகமானோர் 60வயதை தாண்டியவர்களாகவும், நோயாளிகளாகவும் இருப்பதாகவும் அவர் சுட்டிக்காட்டியிருக்கிறார்.

No comments:

Post a Comment