Saturday, March 16, 2013

பகிரங்கமாக மன்னிப்பு கேட்டார் முதல்வர்



தமிழகத்தில் ஒருமித்த கருத்துடைய கட்சிகள் ஓரணியில் திரண்டு ஒரு மாற்று அணி அமைக்கும் முயற்சி நடைபெற்றுக் கொண்டிருப்பதாக நாம் ஏற்கெனவே கூறியிருந்தோம். அப்படி ஓர் அணி அமையும் பட்சத்தில் அதில் மனிதநேய மக்கள் கட்சியும் இடம்பெறலாம் என்பதாகவும் தகவல்கள் வெளியான நிலையில் மாற்று அணியின் சாதக பாதகங்கள் குறித்தும் தமிழகத்தின் தற்போதைய அரசியல் சூழல் குறித்த கேள்விகளோடும் நாம் மனித நேய மக்கள் கட்சியின் தலைவர்களில் ஒருவரும் ராமநாதபுரம் சட்டப்பேரவை உறுப்பினருமான பேராசிரியர் ஜவாஹிருல்லாவை புதிய தரிசனத்திற்காக சந்தித்தோம்.


இலங்கைக்கு எதிரான அமெரிக்காவின் தீர்மானத்தால் எந்தப் பயனும் இல்லை அது எல்.எல்.ஆர்.சி.யின் அறிக்கைதான் என்று பரவலாக தமிழ் தேசியவாதிகள் அதற்கு எதிர்ப்பு தெரிவித்து வரும் நிலையில் அந்த தீர்மானம் குறித்த உங்கள் பார்வை என்ன?

ஒன்றுமே இல்லை என்ற இடத்தில் ஏதோ ஒன்று என்ற அடிப்படையில்தான் அமெரிக்கத் தீர்மானத்தை ஏற்றுக்கொள்ள வேண்டியுள்ளது.ஆனால் நிச்சயமாக ஐ.நா.வும் சரி, உலக நாடுகளும் சரி, இலங்கைத் தமிழர்களுக்குத் துரோகம் இழைத்துவிட்டன என்றுதான் கூற வேண்டும். ஐ.நா. பொதுச்செயலாளர் ஒரு வல்லுநர் குழுவை நியமிக்கின்றார். அந்த குழு இலங்கையில் போர்க் குற்றங்கள் நடைபெற்றிருக்கின்றன. மிகப்பெரிய அளவில் இனப்படுகொலை நடைபெற்றிருக்கின்றது... என்று ஒரு அறிக்கையை கொடுத்திருக்கிறார்கள். இந்த அடிப்படையில் இந்த அறிக்கையை முன்வைத்து ஐ.நா. தானாகவே முன்வந்து இதை விசாரிக்க வேண்டும்.எப்படி யூகோஸ்லோவியாவிற்கும், உகாண்டாவுக்கும்,லெபனானுக்கும் விசாரணை ஆணையம் வைக்கப்பட்டதோ அதுபோல் இலங்கைக்கும் ஒரு விசாரணை ஆணையம் வைக்கப்பட்டிருக்க வேண்டும். ஆனால் அதை யாரும் செய்யவில்லை. இந்தியா உட்பட அனைவருமே இலங்கைக்கு ஆதரவாக செயல்படுகிறார்கள் என்பதே உண்மை. சர்வதேச குற்றவியல் விசாரணை போர்க் குற்றங்கள் மீது, இனப்படுகொலை மீது நடத்தப்பட வேண்டும் என்பதே எங்கள் நிலைப்பாடு. இதை முதலில் வலியுறுத்தியதும் நாங்கள்தான்.அதுமட்டுமின்றி, இந்தியா வற்புறுத்தி வரும் 13 வது சட்டத்திருத்தத்தை நாங்கள் ஏற்க முடியாது என்று இலங்கை கூறிய பிறகும் கூட இந்தியா, இலங்கையை நட்பு நாடு என்று கூறுவது நியாயமான நிலைப்பாடு அல்ல.


தமிழக மீனவர்கள் எல்லை தாண்டி வருவதாகவும் இது தொடர்ந்தால் இலங்கை மீனவர்களைத் திரட்டிக்கொண்டு தமிழகத்திற்குள் நுழைந்து போராட்டம் நடத்துவேன் என்றும் இலங்கை அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா கூறியிருக்கிறாரே...

அது வெறும் வாய்ச்சவடால். அவர் தமிழகத் திற்குள் கால்வைத்தால் தமிழக முதலமைச்சர் அவரை கைது செய்து புழல் சிறைக்கு அனுப்புவார். இது ஒரு புறம் இருக்கட்டும்..பொதுவாகவே மீனவர்கள் சர்வதேச எல்லையைத் தாண்டுவது என்பது இயல்பான ஒன்று. இது உலகம் முழுவதும் நடைபெறும் ஒரு விசயம். குஜராத் மீனவர்கள் பாகிஸ்தான் கடல் எல்லைக்கு சென்றுவிடுவதும், பாகிஸ்தான் மீனவர்கள் இந்திய எல்லைக்குள் வருவதும் வாடிக்கையான ஒன்று. ஆனால் யாரும் யாரையும் சுடுவது, அடித்து விரட்டுவது எல்லாம் இல்லை. ஆனால் உலகிலேயே இலங்கை மட்டுமே இது போன்ற செயல்களில் ஈடுபடுகிறது. டக்ளஸ் தேவானந்தா இப்படி வாய்க்கொழுப்பெடுத்து பேசுவதற்குக் காரணம், இந்திய அரசின் இயலாமைதான். இது வரை இலங்கை கடற்படையினரால் 500க்கும் மேற்பட்ட மீனவர்கள் இறந்திருக்கிறார்கள். இது போன்ற சூழலில் தமிழக காவல்துறையினர் தமிழக மீனவர்கள் அடையாளம் தெரியாதவர்களால் சுட்டுக் கொல்லப்பட்டார்கள் என்றுதான் வழக்குப் பதிவு செய்கிறார்கள். இந்த நிலை மாற வேண்டும்...நான் என்ன சொல்லுகிறேன் என்றால், இதுபோன்ற தாக்குதல்கள் நடக்கும் போது அப்போது யார் இலங்கை கடற்படை தளபதியோ அவர் பெயரை குறிப்பிட்டு வழக்கை பதிவு செய்ய வேண்டும். சர்வதேச நீதிமன்றத்தில் வழக்கை நடத்தி இதுவரை பாதிக்கப்பட்ட தமிழக மீனவர்களுக்கு இலங்கையிடம் உரிய இழப்பீடு வாங்க வேண்டும்..சல்மான் குர்ஷித் இந்தியா பெரியண்ணன் மனப்பான்மையோடு நடக்க இயலாது என்று கூறியிருக்கிறார். நாம் அப்படி நடக்கவில்லை. இலங்கைதான் அப்படி நடந்து கொள்கிறது. 2011 உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டியில் இந்தியாவிடம் தோற்றதற்காக ராமநாதபுரம் மீனவர்கள் 4 பேர் கொல்லப்பட்டதெல்லாம் மிகவும் கொடூரமான விசயம். தொடர்ந்து இலங்கை கடற்படை தமிழக மீனவர்களின் மீது தாக்குதல் நடத்திக் கொண்டுதான் இருக்கின்றது. இந்த நிலை மாற வேண்டும் எனில் இலங்கையை அடக்கி வைக்கும் ஆளுமை இந்தியாவிற்கு வரவேண்டும் என்பதே எங்கள் கருத்து.


இலங்கை மீது சர்வதேச போர்க்குற்ற விசாரணை நடத்தக்கோரியும், தனி ஈழத்திற்கான வாக்கெடுப்பு நடத்த வலியுறுத்தியும் உண்ணாவிரதப் போராட்டம் நடத்திய சென்னை லயோலா கல்லூரி மாணவர்களை காவல்துறை கைது செய்திருப்பது சர்ச்சைக்குள்ளாகியிருக்கும் நிலையில் இது குறித்து உங்களின் கருத்து என்ன?

நீண்டகாலத்திற்குப் பிறகு பொதுவான பிர்ச்சினைகளில் தமிழக மாணவர்கள் இப்படி போராட்டக் களத்திற்கு வந்திருப்பதற்காக முதலில் நான் அவர்களை வாழ்த்துகிறேன். அதே நேரத்தில் மிக நியாயமான கோரிக்கை களுக்காக எந்த நிலைப்பாட்டை தமிழக அரசே ஒரு தீர்மானமாக சட்டமன்றத்தில் நிறைவேற்றி யுள்ளதோ, இரண்டாவது முறையாக மீண்டும் கடந்த முறை நடைபெற்ற சட்டப்பேரவை கூட்டத் தொடரில் நான் அதை வலியுறுத்திப் 

பேசியபோது, முதலமைச்சரும் அதை ஆமோ தித்து மீண்டும் வலியுறுத்தினார்களோ அதே பிரச்சினைக்காகத்தான் லயோலா கல்லூரி மாணவர்கள் உண்ணாவிரதத்தில் ஈடுபட்டார்கள். அவர்களை நள்ளிரவில் கைது செய்தது ஏற்புடையது அல்ல என்பதே என் கருத்து. தமிழக அரசு இனி இது போல் நடந்து கொள்ளக்கூடாது. 


டெசோ அமைப்பின் சார்பாக நடைபெற்ற ஒரு நாள் வேலை நிறுத்தம் குறித்த உங்கள் பார்வை..

ஈழத் தமிழர்கள் பிரச்சினையைப் பொறுத்த வரை, 2006 முதல் 2011 வரை தமிழகத்தில் தி.மு.க.ஆட்சிதான் இருந்தது. தமிழகம் மட்டுமின்றி மத்திய ஆட்சியிலும் அவர்கள் அங்கத்தினர்களாக இருந்தார்கள். இப்போதும் இருக்கிறார்கள். ஈழத்தமிழர்களின் வாழ்வின் பல முக்கியமான நிகழ்வுகள் இந்த காலகட்டத்தில்தான் நிகழ்ந்தன. அப்போது இதுபோன்ற போராட் டங்களை நடத்தியிருந்தால் பல லட்சக் கணக்கான தமிழர்களின் வாழ்வுரிமையைக் காப்பாற்றியிருக்கலாம். இப்போது காலம் கடந்து இதை செய்திருக்கிறார்கள். எப்படியோ இப்பொழுதாவது ஞானம் வந்ததே 
என்றவரிடம் நாம் குறுக்கிட்டு அப்பொழுதும் கூட மனிதச்சங்கிலிப் போராட்டம், உண்ணா விரதப்போராட்டம் என்று தி.மு.க.பல்வேறு போராட்டங்களை நடத்தியதே என்றோம். அதற்கு அதெல்லாம் உணர்வு ரீதியிலான போராட் டங்களே அல்ல. அப்பொழுது அமைதியாக இருந்தவர்கள் இப்பொழுது டெசோவை தூசி தட்சி எடுத்திருப்பது ஏன் என்பது நாம் அனைவரும் அறிந்ததே.


நரேந்திர மோடியோடு நட்பு பாராட்டும் ஜெயலலிதாவோடு மனித நேய மக்கள் கட்சி கூட்டணி வைத்துக் கொண்டதும், நட்பு பாராட்டுவதும் சரியா என்ற ஒரு விமர்சனத்திற்கு உங்களின் பதில்..

பாபர் மஸ்ஜித் பிரச்சினைதான் இந்தியாவில் சமீப காலமாக நடைபெற்று வரும் பயங்கரவாத செயல்களின் ஊற்றுக்கண். இதைத் தொடங்கி வைத்தது காங்கிரஸ் கட்சி. 1949ஆம் ஆண்டு வரை 420 ஆண்டுகளுக்கும் மேலாக ஏக இறைவனை வணங்குவதற்காக கட்டப்பட்ட பள்ளிவாசல் அது. அதில் 1949ஆம் வருடம் டிசம்பர் மாதம் 22 ஆம் தேதி நள்ளிரவில் இந்துக் கடவுள்களின் சிலைகள் வைக்கப்பட்டன. அப்போது இந்தியா வின் பிரதமராக இருந்தவர் நேரு. உ.பி.யில் முதல மைச்சராக இருந்தவர் கோவிந் வல்லபபாய் பந்து. அப்பொழுதே இந்த பிரச்சினையில் அரசு தலையிட்டு, பாபர் மஸ்ஜித்தை இசுலாமியர்களிடம் ஒப்படைத்திருந்தால் பிரச்சினை இருந்திருக்காது. ஆனால் அதை விடுத்து அங்கே பூட்டு போட்டார்கள். வழக்கு நடைபெற்றது. அப்படி போடப்பட்ட பூட்டு உடைக்கப்பட்டது ராஜீவ் காந்தி காலத்தில்தான். அதன் பிறகு 1989 ல் ஏற்பட்ட கலவரங்கள் அதில் ஏராளமான இசுலாமியர்களும் கொல்லப்பட்டதும் நாம் அறிந்ததே. அப்பொழுதும் காங்கிரஸ் ஆட்சிதான் மத்தியில். ஆக இவை அனைத்துமே காங்கிரஸின் கைங்கரியம்தான். ஆனால் அவ்வப்போது இசுலாமியர்களைத் திருப்திபடுத்துவதற்காக சிறிய அளவில் ஏதாவது செய்துவிட்டு, அதே நேரத்தில் வலதுசாரி சிந்தனையாளர்களைத் திருப்திப்படுத்த அதைவிட மோசமாக ஏதாவது செய்வதுதான் காங்கிரஸ் கட்சியின் வேலை.சமீபத்தில்கூட காவிப்பயங்கரவாதம் என்று உள்துறை அமைச்சர் பேசினார். அதன்பிறகு சட்டவிதிமுறைகளுக்கு முரணாக அப்சல்குரு தூக்கிலிடப்பட்டதும் நடந்தது. 2002 ல் குஜராத்தில் நரேந்திர மோடி மிகப்பெரிய இனப்பேரழிவைச் செய்தார் என்பதில் எந்த சந்தேகமும் இருக்க முடியாது. அதே சமயம் தமிழக முதலமைச்சர் ஜெயலலிதா அவர்கள் 1999ஆம் ஆண்டு த.மு.மு.க. சார்பாக சென்னை சீரணி அரங்கில் நடைபெற்ற முஸ்லீம்களின் வாழ்வுரிமை மாநாட்டில் தமது கடந்த கால தவறுகளுக்காக பகிரங்கமாக மன்னிப்புக் கேட்டார் என்பதையும் நான் இங்கே பதிவு செய்ய விரும்புகிறேன். எனவே அரசியலை அரசியலாகப் பார்க்க வேண்டும். பா.ஜ.க. வெளிப்படையான எதிரி என்றால் காங்கிரஸ் முதுகில் குத்தும் துரோகி என்பதுதான் உண்மை.


மரணதண்டனை குறித்த இசுலாமிய அமைப்புகளின் கருத்து அவ்வப்போது மாறு படுகிறது என்ற ஒரு விமர்சனம் வைக்கப்படு கின்றதே..

மரணதண்டனை முற்றிலுமாக நீக்கப்பட வேண்டும் என்பதுதான் எங்கள் நிலைப்பாடு. மூன்று தமிழர்களின் உயிர்காக்க தமிழக சட்டப்பேரவையில் முதலமைச்சர் தீர்மானம் கொண்டுவந்ததற்கு ம.ம.க.வும் ஒரு காரணம்.
மரண தண்டனை நீக்கப்பட வேண்டும் என்று கூறுவதற்கான காரணத்தை, உச்சநீதி மன்றத்தின் நீதிபதிகளே தெளிவாகச் சொல்லி விட்டார்கள். நீதிபதி கே.எஸ்.ராதாகிருஷ் ணன் தலைமையிலான அமர்வு ஒரு தீர்ப்பை அளித்துள்ளது. மரண தண்டனை அளிக் கப்படும் வழக்குகளில் சீரான விதிமுறைகள் பின்பற்றப்படவில்லை. பல வழக்குகளில் மரண தண்டனை என்பது நீதிபதிகளின் மனநிலை சார்ந்தே வழங்கப்படுகின்றது என்று. ஆக இந்த அடிப்படையில், இந்திய நீதிபரிபாலனை சபைக்கு மரண தண்டனை விதிக்கக்கூடிய அளவிற்கு யதார்த்தமான தகுதிகள் இல்லை என்பதே எங்கள் கருத்து. ஏனெனில் பல அப்பாவிகள் கைது செய்யப்பட்டு, பல ஆண்டுகளாக சிறையில் வாடி சில நேரங்களில் அவர்கள் நிரபராதிகள் என்று விடுதலை செய்யப்படுகிறார்கள் அல்லது வாழ்நாள் முழுவதும் சிறையில் வாடும் நிலையும் ஏற்பட்டுள்ளது. சில சமயங்களில் அவர்கள் தூக்குக் கயிற்றையும் சந்திக்கிறார்கள். எனவே முற்றிலுமாக மரண தண்டனை இந்தியாவின் நீதிபுத்தகங்களில் இருந்து தூக்கி எறியப்பட வேண்டும் என்பதே எங்கள் நிலைப்பாடு.


தமிழக மண்சார்ந்த பிரச்சினைகளில் ஒருமித்த கருத்துடைய கட்சிகள் ஓரணியில் திரளவேண்டும் என்ற கருத்து சமீபகாலமாக அதிகரித்து வருகிறது. இதைக் குறித்த ம.ம..க.வின் பார்வை என்ன?

மாற்று அணி என்பது நம் ஆசையாக இருக்கின்றது. அதில் எங்களுக்கும் மாற்றுக்கருத்து இல்லை. காரணம், கூடங்குளம் பிரச்சினையில் இரண்டு திராவிடக் கட்சிகளுமே மத்திய அரசின் கொள்கைகளைத்தான் கையாளுகிறார்கள். மது விலக்கு போன்ற விவகாரங்களில் அண்ணாவின் கொள்கைக்கு மாறாகத்தான் இரண்டு கட்சிகளுமே செயல்படுகின்றன. இந்தச் சூழலில் காவிரி, ஈழம், கூடங்குளம் போன்ற பிரச்சினைகளில் ஒத்த கருத்துடைய கட்சிகள் தமிழகத்தில் ஓரணியில் நிற்பது உண்மைதான். ஆனால், இவர்களின் ஆதரவுத் தளம் பல்கிப்பெருகி வரும்போதுதான் 

மாற்று அணி என்பது சாத்தியம்... உடனடியாக வரும் நாடாளுமன்றத் தேர்தலிலேயே அப்படி ஒரு கூட்டணி அமையும் சூழல் இன்னும் கனியவில்லை என்றே நினைக்கின்றேன். ஆனால் வருங்காலத்தில் அப்படி ஒரு மாற்று அணி நிச்சயம் தேவை. அதை நோக்கி நாம் செல்ல வேண்டும் என்பதையும் நான் வலியுறுத்துகிறேன்.


இசுலாமிய அமைப்புகளின் போராட்டத்தால் தான் விஸ்வரூபம் திரைப்படம் இத்தனை பெரிய வெற்றி பெற்றது என்ற கருத்தை நீங்கள் ஏற்றுக்கொள்கிறீர்களா-?

படம் வெற்றி, தோல்வி என்பதை விட அமெரிக்காவின் ஏவலாளாக கமலஹாசன் மாறி அமெரிக்காவிற்காக எடுத்த ஆவணப்படம்தான் விஸ்வரூபம் என்பதை இன்றைக்கு அனைவருமே ஏற்றுக் கொண்டிருக்கிறார்கள். நான் மையத்தில் நிற்கிறேன், நான் ஒரு முற்போக்குவாதி, மனித உரிமைகளுக்காக நிற்பவன் என்ற கமலின் வேடத்தை, முகமூடியைக் கிழித்திருக்கிறோம். அந்த வகையில் நாங்கள் வெற்றி பெற்றிருக்கிறோம்.


‘இப்படி எல்லாவற்றையும் எதிர்த்தால் இனி பாம்பு, பல்லியை வைத்துத்தான் படமெடுக்க வேண்டும்’ என்று இயக்குநர் கே.எஸ்.ரவிக்குமார் உள்ளிட்டோர் கூறியிருப்பது பற்றி..

இந்தக் கருத்தை தமிழ் திரை உலகத்தில் ஏற்பட் டுள்ள சிந்தனை வறட்சியின் வெளிப்பாடாகத்தான் பார்க்கிறேன். வெற்றிபெறாவிட்டாலும்கூட அழுத்தங்களை ஏற்படுத்தியுள்ள படங்கள் ஏராளம் உள்ளன. 
கே.எஸ்.ரவிகுமாருக்கு சிந்தனை வறட்சி ஏற்பட்டதன் விரக்தியால் அவர் அப்படி பேசியிருப்பதாகவே நாங்கள் நினைக்கிறோம். 

இதைத்தாண்டி முக்கியமான விசயத்தை பதிவு செய்ய விரும்புகிறேன். ஒரே ஒரு கிராமத்திலே வழக்கில் உச்ச நீதிமன்றம் அளித்த ஒரு தீர்ப்பில் ‘இருட்டிய அறைக்குள்ளே இசை’ ஒளி இவற்றின் கலவையோடு ஒரு திரைப்படம் ஓடும் போது, அது மிகப்பெரிய சிந்தனைத் தாக்கத்தை ஏற்படுத்துகிறது. எனவே திரைப்படம் எடுப்பவர்களுக்கு சமூகப் பொறுப்பு இருக்க வேண்டும்” என்று கூறியது. 

இந்த கடமையில் இருந்து திரையுல கமும்,தணிக்கை வாரியமும் தவறும்போதுதான் நாங்கள் சாலைக்கு வந்து போராட வேண் டியுள்ளது. 

- செந்தில் 

புதிய தரிசனம், மார்ச்-16,2013

No comments:

Post a Comment