Thursday, August 1, 2013

புதிய தரிசனம்-ரமலான் சிறப்பிதழ்-ஜவாஹிருல்லா சிறப்பு பேட்டி

புதிய தரிசனம்-ரமலான் சிறப்பிதழ்-ஜவாஹிருல்லா சிறப்பு பேட்டி


தமிழகத்தில் தொடர்ந்து பா.ஜ.க. மற்றும் இந்து அமைப்புகளைச் சேர்ந்தவர்கள் படுகொலை செய்யப்பட்டு வரும் சூழலில், தமிழக அரசு பயங்கரவாதிகள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று இந்து அமைப்புகளும், தனிப்பட்ட விரோதத்தின் காரணமாக நடைபெறும் கொலைகளுக்குக் கூட இசுலாமிய அமைப்புகளைக் குற்றம் சாட்டுவது ஏற்புடையதல்ல என்று இசுலாமிய அமைப்புகளும் பரஸ்பரம் அறிக்கைப் போர் நடத்தி வரும் சூழலில், மனித நேய மக்கள் கட்சியின் தலைவர்களில் ஒருவரும் சட்டப்பேரவை உறுப்பினருமான பேராசிரியர் ஜவாஹிருல்லாவைச் சந்தித்தோம். ரமலான் வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொண்டு கேள்விகளைத் தொடங்கினோம்.


இந்து அமைப்புகளைச் சேர்ந்தவர்கள், பா.ஜ.கவைச் சேர்ந்தவர்கள் கொலை செய்யப்படுவதும், தாக்கப்படுவதும் தமிழகத்தில் தொடர்ந்து நடைபெறுவது குறித்த உங்கள் பார்வை என்ன?

இது வன்மையாகக் கண்டிக்கத் தக்கது. சக மனிதனின் உயிரைப் பறிப்பது என்பது மனித நேயமற்ற செயல். ஒரு ஜனநாயக நாட்டில் மாற்றுக் கருத்துகளுக்கு எல்லோருக்கும் உரிமை உண்டு. அது மதிக்கப்படவும் வேண்டும். அந்த அடிப்படையில் இந்தக் கொலைகளை நாங் கள் வன்மையாகக் கண்டிக்கிறோம். உண்மையான குற்ற வாளிகளைக் கைது செய்ய வேண்டிய கடமை காவல் துறைக்கு இருக்கிறது. ஆனால், இந்து அமைப்பினர் யார் கொலை செய்யப் பட்டாலும் இசுலாமியர்கள்தான் காரணம் என்பது போன்ற சித்திரம் வரையப்படுவது கண்டிக்கத்தக்கது. ஒருவேளை அந்தக் கொலைகளை இசுலாமியர் யாராவது செய்திருந்தாலும் கூட, அதை ஒட்டுமொத்த இசுலாமியச் சமூகமும் நிச்சயம் ஏற்றுக் கொள்ளப் போவதில்லை. எனவே இதற்கு மதச்சாயம் பூசுவது தேவையற்றது. பல தனிப்பட்ட விரோதங்களுக்காகக் கொலைகள் நடக்கின்றன. உதாரணமாக வேலூரில் பா.ஜ.க.வின் மருத்துவர் அணியைச் சேர்ந்த டாக்டர் அரவிந்த் ரெட்டி கொலை செய்யப்பட்டது ஒரு பெண் விவகாரத்தில்தான் என்பது வேலூர் மக்கள் அனைவருக்குமே தெரியும். இதற்கும் இசுலாமியர்களுக்கும் என்ன தொடர்பு? ஆனால் அதற்கும் மதச்சாயம் பூச நினைப்பது கண்டிக்கத்தக்கது.

தமிழகத்தில் தீவிரவாதப் போக்கு அதிகரித்து விட்டதாகவும், காவல்துறை மிகக் கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் இந்து அமைப்புகள் கோரிக்கை வைத்துள்ளனவே.?

அப்படி ஒரு தீவிரவாதப் போக்கு தமிழகத்தில் இருப்பதாகத் தெரியவில்லை. கடந்த ஆட்சியில் தென்காசி இந்து முன்னணி அலுவலகத்தில் குண்டு வெடிக்கிறது. அதை இசுலாமியர்கள்தான் செய்தனர் என்று கூறி தமிழகம் முழுவதும் பெரிய ஆர்ப்பாட்டங்கள் எல்லாம் அரங்கேறின. ஆனால் அதன் பின் அதில் கைது செய்யப்பட்ட 6 பேரும் இந்துக்கள்தான். அதே போல் அத்வானி மதுரைக்கு வந்தபொழுது பைப் வெடிகுண்டு வைத்து அவரைக் கொலை செய்ய முயற்சி நடைபெற்றதாகவும் அதில் தொடர்புடையதாகவும் சில இசுலாமிய இளைஞர்களின் படங்களை வெளியிட்டனர். அப்படி நடந்திருந்தால் அது வன்மையாகக் கண்டிக்கத்தக்கது. ஆனால் அதே வழக்கில் சில நாட்களுக்கு முன்னால் பாண்டிச்சேரியைச் சேர்ந்த இரண்டு இளைஞர் களைக் கைது செய்திருக்கிறார்கள். அவர்கள் இசுலாமியர்கள் அல்லர். ஆனால் இது போன்ற செய்திகளை ஊடகங்களும் பெரிதாக எடுத்துச் சொல்வதில்லை. வேண்டுமென்றே இதுபோன்ற சில செய்திகள் இருட்டடிப்புச் செய்யப்படு கின்றன. ஆக பொத்தாம் பொதுவாகக் குற்றம் சுமத்துவது என்பது ஏற்புடையதல்ல.

சமீப காலங்களாக இசுலாமியர்களின் மீதோ அல்லது இசுலாத்தின் மீதோ விமர்சனங்கள் வைக்கப்பட்டால், விமர்சித்தவர்களின் மீது கடுமையான எதிர்த்தாக்குதல் தொடுக்கப்படுகிறது. இது இசுலாமியர்களை மேலும் தனிமைப்படுத்திவிடும் என்று இலக்கியவாதிகள், எழுத்தாளர்கள் மத்தியில் ஒரு கருத்து எழுந்துள்ளதே ?

இது மிகவும் தவறான விமர்சனம். தமிழகத்தில் எந்தச் சமூகத்தின் மனது புண்படும்படியான நிகழ்வுகள் நடைபெற்றாலும் அதற்கு எதிர்க்கருத்து வைக்கப்படுவது என்பது வாடிக்கையான ஒன்றுதான். நீங்கள் சொன்ன இலக்கியவாதிகள் உட்பட பலரும் கூட தங்கள் மீது விமர்சனம் வைக்கப்படுகின்றபோது அதை எதிர்த்துத் தங்கள் கருத்துகளைப் பதிவு செய்யத்தான் செய்கிறார்கள். எதிர்க்கருத்துக்கள் என்பது வரவேற்கக் கூடியவைதான். ஆனால் அதைத் தாண்டி மிரட்டுவது போன்ற செயல்களில் யார் ஈடுபட்டாலும் அதை நாங்கள் வன்மையாகக் கண்டிக்கிறோம்.

சமீபத்தில் 3 கோரிக்கைகளோடு கோட்டையை நோக்கிப் பேரணி ஒன்று நடத்தினீர்கள். அதில் முஸ்லீம்களுக்கான இட ஒதுக்கீடு, 10 ஆண்டுகளைக் கடந்த சிறைக் கைதிகள் விடுதலை போன்ற கோரிக்கைகளுக்கு ஆதரவளிக்கும் இடது சாரிச் சிந்தனையாளர்கள், பகுத்தறிவாளர்கள் கூட திருமணப் பதிவுச் சட்டத்தில் இருந்து இசுலாமியர்களுக்கு விலக்கு அளிக்க வேண்டும் என்ற உங்கள் கோரிக்கையோடு உடன்படவில்லையே ?

எங்களுடையை அந்தக் கோரிக்கையை சரியாகப் புரிந்து கொள்ளாமல் விமர்சிக்கிறார்கள் என்பதுதான் உண்மை. நாட்டில் நடைபெறும் அனைத்துத் திருமணமும் பதிவு செய்யப்பட வேண்டும் என்று உச்சநீதிமன்றம் அளித்த தீர்ப்பின் அடிப்படையில், தமிழக அரசு கட்டாயத் திருமணப் பதிவுச் சட்டம் 2009ஐ கொண்டு வருகிறது. இசுலாமியர்களின் திருமணங்களைப் பொறுத்தவரை ஜமாத்தில் நடைபெறும் திருமணங்கள் காலம் காலமாக முறையாக எழுத்துப் பூர்வமாகப் பதிவு செய்யப்படுகின்றன. அது ஒரு ஆவணம். இதில் எங்களுடைய கோரிக்கை ஒன்று மட்டும்தான். “தமிழக அரசு தலைமை ஹாஜி அவர்களால் அங்கீகரிக்கப்பட்ட இமாம் அளிக்கும் சான்றிதழை ஏற்றுக் கொண்டு, பதிவாளர் திருமணச் சான்று கொடுக்க வேண்டும்” என்பதுதான் எங்கள் கோரிக்கை. இந்துக் கோவில் களில் நடைபெறும் திருமணங்களுக்கு அந்தக் கோவில்களின் செயல் அலுவலர் அளிக்கும் சான்றிதழ்களை ஏற்றுக் கொண்டு சான்றளிக்க சில விதிவிலக்குகள் அளிக்கப்பட்டுள்ளன. நாங்களும் அதில் சில திருத்தங்களைத்தான் கேட்கிறோம்.

முத்தலாக் முறை குறித்து ஏற்கனவே பல முறை பல்வேறு சர்ச்சைகள் எழுந்துள்ள நிலையில் சமீபகாலமாக மீண்டும் அது விவாதப்பொருளாக மாறியுள்ளதே ?

கட்சியைப் பொறுத்தவரை இது போன்ற மத ரீதியிலான விவகாரங்களுக்குப் பதில் சொல்வதில்லை. என்னுடைய தனிப்பட்ட கருத்து இதில், “முத்தலாக் என்பது ஒரே அமர்வில் ஒருவர் மூன்று முறை நான் என் மனைவியை விவாகரத்துச் செய்கிறேன் என்று சொல்லிவிட்டால் அந்தத் திருமண உறவு முறிந்து விடுவதாகக் கூறுவது ஏற்புடையது அல்ல. 3 மாதங்கள் கால அவகாசம் அளிக்கப்பட்டு அந்த இடைவெளியில் 3 முறை சொல்லப்பட வேண்டும் என்பதுதான் முறை. “காரணம் அந்த மூன்று மாதத்திற்குள் அந்தத் தம்பதிக்குள் மனமாற்றம் ஏற்பட்டு அவர்கள் இணைந்து வாழ வழி பிறக்கலாம் என்பதற்காகத்தான். யாருமே உடனடியாக ஒரு தம்பதியினர் பிரிவதை விரும்புவதில்லை. எங்களுடைய த.மு.மு.க.விலேயே இதற்காகக் குழுக்கள் வைத்து இதுபோன்ற பிரச்சனைகளுக்காக வரும் தம்பதியினரிடம் பேசுகின்றோம். 75 விழுக்காட்டினர் மீண்டும் நாங்கள் சேர்ந்து வாழுகின்றோம் என்று முடிவெடுத்து விடுகின்றனர். 25 விழுக்காட்டினர் பிரிந்து சென்றுவிடுவதுண்டு. ஆனால் அதற்காக விவாகரத்து வழக்குகளுக்காக நீதிமன்றத்தைத்தான் நாட வேண்டும் என்று சொல்வதில் எனக்கு உடன்பாடில்லை. காரணம் நீதிமன்றத்தில் நடைபெறும் விவாகரத்து வழக்குகளின் நிலைமை நமக்கு நன்கு தெரியும்.

இசுலாமியச் சமூகத்தைச் சேர்ந்தவர்கள் அதிலும் குறிப்பாக பெண்கள் கல்வியறிவில் இன்னும் பின்தங்கி இருப்பதாகத் தோன்றுகிறதே ?

இதுவும் சரியான கருத்து அல்ல. இந்த நிலை 10 ஆண்டுகளுக்கு முன் இருந்தது என்பது உண்மைதான். சமீபத்தில் கூட நம்முடைய நிதிஅமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் அவர்கள் என்னிடம் பேசிக்கொண்டிருந்தபோது, அவர் படித்த உத்தமபாளையம் கருத்த ராவுத்தர் கல்லூரிக்கு சமீபத்தில் சென்றிருந்தபோது அங்கு முன்பை விட தற்போது ஏராளமான இசுலாமியப் பெண்கள் படிப்பதாகத் தெரிவித்தார். இது போல் பொறியியல் , மருத்துவப் படிப்புகளிலும் கூட ஏராளமான முஸ்லீம் பெண்கள் இசுலாமிய மார்க்க நெறிகளுக்குட்பட்டு படித்துக் கொண்டுதான் இருக்கிறார்கள். பல்வேறு உயர் பதவிகளுக்கும் கூட முஸ்லீம் பெண்கள் வந்து கொண்டுதான் இருக்கிறார்கள்.

அ.தி.மு.க.விற்கு மிகவும் நெருக்கமாக இருந்த ஜவாஹிருல்லா திடீரென்று கனிமொழியை ஆதரிக்க வேண்டிய அவசியம் என்ன ?

முதலில் ஒன்றைப் புரிந்துகொள்ள வேண்டும். 2011 சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெறும்போது அ.தி.மு.க.கூட்டணியில் நாங்கள் இருந்தோம்.ஆனால் உள்ளாட்சி மன்றத் தேர்தல் வந்தபோதும், கூட்டுறவு சங்கத் தேர்தலின் போதும் அ.தி.மு.க. தனித்தே போட்டியிட்டது. மாநிலங்களவைத் தேர்தல் அறிவிக்கப்பட்டபோதும் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் ராஜாவை முதலில் ஆதரிக்கவில்லை. தங்கள் கட்சியின் சார்பாக நிறுத்தப்பட்ட 5 வது வேட்பாளர் வெற்றி பெற மாட்டார் என்பது தெரிந்த பின்தான் தனது வேட்பாளரைத் திரும்பப் பெற்றுக் கொண்டு ராஜாவை ஆதரித்தது அ.தி.மு.க. ஆக, இந்த 5 வேட்பாளர்களின் வெற்றி உறுதியான நிலையில் ஆறாவது இடத்திற்கு தி.மு.க., தே.மு.தி.க. இடையே போட்டி. இதில் யாரை ஆதரிப்பது என்று பார்க்கின்றபோது தே.மு.தி.க.வைப் பொறுத்தவரை அது தனது சொந்தக் கட்சி உறுப்பினர்களையே காப்பாற்றிக் கொள்ள இயலாத நிலையில் இருக்கிறது. ஒரு வேளை அதற்கு வாக்களித்து அது வெற்றி பெற்றாலும் அந்தக் கட்சியின் சார்பாக வெற்றி பெற்ற வேட்பாளர் தொடர்ந்து தே.மு.தி.க.வில் இருப்பாரா என்பதும் சந்தேகம்தான். இதைத் தாண்டி பல கோரிக்கைகளைத் தொடர்ந்து நாங்கள் தமிழக முதலமைச்சரிடம் வலியுறுத்தி வந்துகொண்டுதான் இருந்தோம். கூடங்குளம், மதுவிலக்கு போன்ற பல்வேறு விவகாரங்களில் எங்கள் குரலுக்கு இந்த அரசு செவிசாய்க்கவில்லை. இதையடுத்துத்தான் நாங்கள் தி.மு.க.வை ஆதரிக்க முடிவு செய்தோம்.

அப்படியே பார்த்தாலும் கூடங்குளம் விவகாரத்தில் தி.மு.க.வும் அணு உலைக்கு ஆதரவாகத்தானே இருக்கிறது.?

நான் அதை மறுக்கவில்லை. கூட்டணியில் இருக்கும் கட்சி களைத் தங்கள் எண்ணத்திற்கு ஏற்ப இழுத்துக்கொண்டே போக வேண்டும் என்ற அ.தி.மு.க.வின் எண்ணத்திற்கு எதிராகத்தான் நாங்கள் முடிவெடுத்தோம்.

பிரதமர் பதவிக்கான போட்டியில் மோடி முந்திக் கொண்டிருப்பதாகத் தொடர்ந்து செய்திகள் வந்து கொண்டிருக்கின்றனவே ..

மோடி ஒரு மாயை. அவர் ஒரு கார்ப்பரேட் உலகத்தின் பிரதிநிதியாக முன்னிறுத்தப்படுகிறார். மோடி போன்றவர்கள் பிரதமராக வந்தால் மிகப்பெரிய சலுகைகள் தங்களுக்குக் கிடைக் கும் என்று கார்ப்பரேட் நிறுவனங்கள் நினைக் கின்றன. கிராமப்புற மக்களுக்கு அங்கு குடிதண்ணீர் கிடையாது. ஆனால் கார்ப்ப ரேட் நிறுவனங்களுக்கு ஆற்றையே திருப்பி விட்டிருக்கிறார். அவர்கள் கூட்டணிக் கட்சிகளும் அவர்களை விட்டு கொஞ்சம் கொஞ்சமாக வெளியேறிக்கொண்டிருக்கின்றனர். எப்படி இந்தியா ஒளிர்கிறது என்று முன்பு கதை சொன்னார்களோ அது போலத்தான் இப்போது மோடியை மையப்படுத்துகிறார்கள் . ஆனால் பா.ஜ.க. பலவீனமாய் இருக்கிறது என்பதுதான் உண்மை.

வர இருக்கும் நாடாளுமன்றத் தேர்தலை மனித நேய மக்கள் கட்சி எப்படி எதிர்கொள்ளப் போகிறது. யாருடன் கூட்டணி ?

அதற்குக் காலம் இருக்கிறது. நானும் தனிப்பட்ட முறையில் இதற்குப் பதில் சொல்ல இயலாது. கட்சியின் உயர்மட்ட குழுதான் முடிவு செய்ய வேண்டும்.

ரமலான் செய்தியாக நீங்கள் மக்களுக்கு கூற விரும்புவது..

ரமலான் என்பது ஒரு பயிற்சிக் காலம். காலை வைகறைக்கு முன் எழுந்து உண்ணாமல், பொய் பேசாமல் முறையாகத் தொழுகை நடத்தி பிரார்த்தனை செய்கிறார்கள். இதைத் தங்கள் வாழ்நாள் முழுவதும் அவர்கள் கடைப் பிடிக்க வேண்டும். நாட்டுக்காகவும், நாட்டு மக்களுக் காகவும் பிரார்த்தனை செய்ய வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன்.

No comments:

Post a Comment