Sunday, January 24, 2016

மனிதநேய மக்கள் கட்சி வழக்கறிஞர் அணி ஆலோசனைக் கூட்டம்



24.01.2016 அன்று காலை 10 மணியளவில் சாந்தோம் நெடுஞ்சாலையில் உள்ள மெரினா ஹோட்டலில் மனிதநேய மக்கள் கட்சியின் வழக்கறிஞர் பிரிவான மனிதநேய வழக்கறிஞர் சங்கத்தின் ஆலோசனைக் கூட்டம் மனிதநேய மக்கள் கட்சியின் தலைவர் பேரா. முனைவர் எம்.ஹெச் ஜவாஹிருல்லாஹ் அவர்களின் தலைமையில் நடைபெற்றது.

மாநிலத்தின் பல பகுதிகளிலிருந்தும் வழக்கறிஞர்கள் கலந்து கொண்டு சமுதாயத்தின் அடித்தட்டு மக்களின் சட்டரீதியிலான அறியாமை நிலைகள் குறித்து பதிவு செய்து அதற்கான இலவச சட்ட ஆலோசனைகள் வழங்குவது மமக வழக்கறிஞர் அணியை வீரியமாக செயல்படுத்துவது உள்ளிட்ட சமூக நீதிக்கான கருத்துக்கள் விவாதிக்கப்பட்டது.
இந்தக் கூட்டத்தில் பின்வரும் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
1) தமிழக சிறைகளில் வாடும் ஆயுள்தண்டனை சிறைவாசிகளில் 10 ஆண்டுகள் நிறைவு செய்த அனைவரையும் எந்தவித சாதி மத பாகுபாடு இல்லாமல் தமிழக அரசு விடுதலை செய்ய வேண்டுமென இக்கூட்டம் கேட்டுக் கொள்கிறது.
2) உயர் நீதிமன்ற, உச்ச நீதிமன்ற நீதிபதிகள் நியமனத்தில் சிறுபான்மையினர் உள்ளிட்ட அனைத்து சமுதாயத்தினருக்கும் உரிய பிரதிநிதித்துவம் வழங்கப்பட்டு சமூகநீதி பாதுகாக்கப்பட வேண்டுமென இக்கூட்டம் கேட்டுக் கொள்கிறது.
3) மனிதநேய மக்கள் கட்சியின் வழக்கறிஞர் அணி சார்பில் பொய் வழக்குகளால் பாதிக்கப்படும் அப்பாவி மக்களைக் காப்பதற்கு மாவட்ட அளவில் சட்ட உதவிக் குழுக்களை அமைப்பது என இக்கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டுள்ளது.
4) விவாகரத்து (தலாக்) செய்யப்பட்டு, மறுமணம் செய்யாமல் இருக்கும் முஸ்லிம் பெண்களுக்கு வஃக்பு வாரியத்தின் மூலம் கிடைக்கும் உதவித் தொகை கிடைக்காமல் இருக்கும் முஸ்லிம் பெண்களுக்கு மமக வழக்கறிஞர் அணியின் மூலம் உதவித்தொகை கிடைக்க ஏற்பாடுகள் செய்வது என்று முடிவு செய்யப்பட்டது.
5) எதிர்வரும் காலங்களில் மனிதநேய மக்கள் கட்சியின் வழக்கறிஞர் அணியை பலப்படுத்தி சிறப்பாக செயல்படுவது என முடிவு செய்யப்பட்டுள்ளது.
இந்தக் கூட்டத்தில் தமுமுக மாநிலத் தலைவர் ஜே.எஸ்.ரிஃபாயி, மனிதநேய மக்கள் கட்சியின் பொதுச் செயலாளர் ப.அப்துல் சமது, தமுமுக பொருளாளர் பி.எம்.ஆர்.சம்சுதீன், தமுமுக மாநிலச் செயலாளர் பேரா. ஹாஜாகனி, மனிதநேய மக்கள் கட்சியின் மாநில அமைப்புச் செயலாளர்கள் தாம்பரம் யாகூப், தஞ்சை பாதுஷா, மனிதநேய மக்கள் கட்சியின் தலைமை நிலையச் செயலாளர் எம். ஹூஸைன்கனி மற்றும் தமுமுக&மமக தென்சென்னை, வடசென்னை மாவட்ட நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
கூட்டத்திற்கான ஏற்பாடுகளை தென்சென்னை மாவட்ட நிர்வாகிகளும், மயிலை பகுதி நிர்வாகிகளும் சிறப்பாக செய்திருந்தனர்.

No comments:

Post a Comment